கரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாகிக் கொண்டிருக்கும் நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்க நேர்ந்தது.
ஒரு கோடி மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்
இப்பற்றாக்குறையை ஈடுகட்ட பல்வேறு வகையில் இருந்தும் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டன. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து அதற்கான ஆலோசனைகளும் நடைபெற்ற நிலையில், தற்போது தென்மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பில் மூன்று உருளைகளை கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
5 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள்
உற்பத்தி மையம் அமைக்கும் இடத்தில் பொதுப்பணித் துறை சார்பாக முதல் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் இன்று (ஜூன் 7) மாலைக்குள் இந்த இயந்திரங்கள் வரும் பட்சத்தில் இன்னும் மூன்று நாள்களுக்குள் அதனை பொருத்தும் பணி நடைபெறும் எனவும் இன்னும் ஓரிரு நாள்களில் பணி முழுமையாக நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் நோயாளிகளுக்கு தங்குதடையின்றி ஆக்ஸிஜன் விநியோகம் செய்யமுடியும் என்றும், மேலும் மதுரையில் மட்டும் ஐந்து இடங்களில் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.