பெட்ரோல் விலை தற்போது 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 66 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் கலால் வரி 23 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் சைக்கிள், மின்சார வாகனம் பயன்பாடு குறித்து அதிகம் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஓலா, மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பதற்கு முன்னதாகவே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆடி ஆஃபர்
இப்படி ஒருபுறம் இருக்க, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மகிழ் இறைச்சிக்கடை உரிமையாளர் சந்திரன் என்பவர் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்காக போஸ்டரும் ஒட்டி உள்ளார். இந்த சலுகை ஆடி மாதம் முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இவரது இறைச்சிக்கடையில் நாட்டுக்கோழி, வாத்து, முயல், வான்கோழி, காடை, கருப்புக்கோழி, கிண்ணிக்கோழி இறைச்சி வாங்கினாலும் முட்டைகளை இலவசமாக வழங்கி வருகிறார்.
இந்த சலுகை திருமங்கலம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுவாகத் தென்மாவட்டங்களில் ஆடி மாதத்தில் ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படும். அதனால் இறைச்சி வியாபாரம் அமோகமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை!