தூத்துக்குடியில் கரோனா ஆய்வுப் பணிக்காகச் செல்லும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அரசு அறிவுறுத்தலின்படி, கரோனா தடுப்பு நடிவடிக்கைகள் மட்டுமின்றி டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்புப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, குளிர்காலங்களில் எடுக்கப்பட வேண்டிய கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு நோய்த்தொற்று படிப்படிப்பாக குறைந்துவருகிறது.
கடந்த மாதங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் ஒரு நாளைக்கு 450 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் தற்போது 100-க்கும் கீழாக குறைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர், "ஊரடங்கு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஒவ்வொரு பணிக்கும் அரசு அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்.
பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். முகக் கவசங்கள் பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இறுதியாக அவர், "மதுரையில் கட்டப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மத்திய அரசு இந்தாண்டு இறுதிக்குள் நிதிஉதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அம்பத்தூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த கரோனா பாதிப்பு!