மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "1993-1994 அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் பொருளாதாரம், மதம் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில், தமிழ்நாட்டில் பொது பிரிவினருக்கு 31% பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 26.5% இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுககீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தாழ்த்தப்பட்டோருக்கு 15% மிகவும் தாழ்த்தப்பட்டோருக்கு 3% பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
அதன் பிறகு தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாகவும், மதரீதியாகவும் மற்றும் மக்கள்தொகை உயர்வு அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படவில்லை. 3.5% இடஒதுக்கீட்டின்படி இஸ்லாமியர்கள் பொருளாதார ரீதியாகவும், அரசின் சலுகைகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2011க்கு பின்னர் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. தற்போதைய நிலவரப்படி இஸ்லாமியர்கள் ஜனத்தொகை 50% அதிகரித்து இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
2021-ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இஸ்லாமியர்களுக்கும் 5% இட ஒதுக்கீடு வழங்க கோரி மனு செய்தும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5% இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.