மதுரை: யூனியன் வங்கி நிர்வாகம் தங்களது ஊழியர்களை நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாளும் ஒன்பது நிற உடையில் வரவேண்டும் எனவும் இல்லாவிட்டால் ரூ.200 அபராதம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சு. வெங்கடேசன் எம்பி இன்று ட்வீட் செய்துள்ளார். அதில், “யூனியன் வங்கி மைய அலுவலகத்திலுள்ள பொது மேலாளர் ஏ.ஆர். ராகவேந்திரா என்பவர் கடந்த 1ஆம் தேதி இப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நவராத்திரியின் ஒன்பது நாள்களும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமாம். விடுமுறை நாளாக இருந்தாலும் கூட கடைபிடிக்க வேண்டுமாம். யார் இவருக்கு இந்த அதிகாரம் தந்தது. ஊழியர் விதிமுறைகளில் எந்த பிரிவின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்.
சு. வெங்கடேசன் எம்பி கண்டனம்
நவராத்திரியை நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம், தனிப்பட்ட உரிமை. ஆனால், எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல். அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்துமீறல்.
இந்த விவகாரத்தில் நிதி அமைச்சகம், யூனியன் வங்கி நிர்வாக தலைவர் உடனடியாக தலையிட்டு சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு கூடுதலாக கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - சு. வெங்கடேசன் எம்பி