மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "38 வயதான என்னுடைய கணவர் ரமேஷ் எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஜல்பைகுரி மாவட்டம், மேற்கு வங்கம் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். 60 நாள் விடுப்பில் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் 28.08.2021 ரயில் மூலமாக பணிக்கு சென்றார். 30.08.2021 சீல்டா ரயில் நிலையத்தில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
பின்னர், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பணியில் சேரவில்லை என்று தெரிவித்தனர். இதனால், திருநெல்வேலி பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கணவர் ரமேஷை கண்டுபிடித்து தர உத்தரவிட வேண்டும்" என அவர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "எல்லையோர பாதுகாப்பு படை வீரர், தலைமறைவாகி விட்டதாக அறிவிக்கலாமா? என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கில் எல்லை பாதுகாப்பு படை உரிய பதிலளிக்க வேண்டும், தவறினால் கமாண்டெண்ட் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனக் கூறி வழக்கை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்.. கே.வி.பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை!