தமிழ்நாடு வருவாய், பேரிடர் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் கரோனா சிகிச்சை நல மையத்தை இன்று (ஜூலை 4) பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்க் கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. கவனக் குறைவாலும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதாலும் நோய் தொற்றுக்கு ஆளாகும் நபர்களை, வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்க முடிகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வருமா என்று பலருக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் நாங்கள் உறுதியாகச் சொன்னோம். ஆனாலும் அதை சிலர் விமர்சனம் செய்தார்கள். இப்போது மதுரை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு அதன் மூலம் உறுதி செய்துள்ளது. இந்த மருத்துவமனை மதுரை மாவட்டத்திற்கு வராது என்று சொன்னவர்களுக்கு இது பதிலடியாக அமைந்துள்ளது". இவ்வாறு அவர் கூறினார்.