மதுரை: சாட்டை துரைமுருகன் என்பவர் யூ-ட்யூபில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துகளைப் பேசியும் காணொலி வெளியிட்டார். இதையடுத்து, துரைமுருகன் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எழுத்துப்பூர்வ பதில்
இதையடுத்து, அரசுத் தரப்பில், "சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி உத்தரவாதத்தை மீறி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிவருகிறார். இதன்பேரில், மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட பிணை ரத்துசெய்ய வேண்டும்" மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த வார விசாரணையின்போது முதலில் இது குறித்து அவதூறாகப் பேசியதை எழுத்து வடிவில் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும். அதில் சாட்டை துரைமுருகன் அவதூறு பேசி இருந்தால் அவரது பிணை ரத்துசெய்யப்படும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
காவல் துறையைச் சாடிய நீதிமன்றம்
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையின்போது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவருடைய பேச்சு குறித்த எழுத்து ஆவணங்களைத் தாக்கல்செய்யவில்லை. இதனால் கடும் கோபமடைந்த நீதிபதி, "ஒரு முதலமைச்சரைத் தவறாக விமர்சனம் செய்துள்ளார்.
அதை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல்செய்ய போதிய கால அவகாசம் கொடுத்து தாக்கல்செய்ய முடியவில்லையா? ஒரு முதலமைச்சருக்கு இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன அவர்களின் வழக்கு எவ்வாறு கையாளப்படும்.
காவல் துறையினர் என்ன வேலை பார்க்கின்றனர், சென்ற உத்தரவின்போதே தெளிவாக நீதிமன்றம் கூறியிருந்தது. அதைப் பின்பற்றவில்லை, நீதிமன்றத்தில் காணொலி மட்டும் கொடுத்துவிட்டால் நீதிமன்றம் என்ன செய்யும். என்ன பொறுப்பாக காவல் துறை வேலை பார்க்கின்றது" எனத் தெரிவித்தார்.
பின்னர், துரைமுருகன் பேசியதை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல்கூட செய்யவில்லை என்றால் காவல் துறையின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும். இதன்பின்னர், எழுத்துப்பூர்வமாகத் தாக்கல்செய்ய ஒரு வாரகால அவகாசம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரப்பட்டது. உங்களை நம்பித்தான் இந்த நாடு உள்ளது எனக் கூறி ஒரு வாரம் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: ஸ்ரீநகர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!