மதுரை: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது சுமார் 50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ளது.
ஆனால் 18 வார்டுகள் மட்டுமே உள்ளன. காயல்பட்டினம் நகராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்தக் கோரி அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே காயல்பட்டினம் நகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 40ஆக உயர்த்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து, நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: Crop Insurance Last Day: பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்!