தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா உள்ளிட்ட 64 பேர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், "நாங்கள் தஞ்சை மாநகராட்சிக்குச் சொந்தமான தஞ்சை, திருவையாறு பேருந்து நிலையத்தில் 30 ஆண்டுகளாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் கீழ் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலும் , திருவையாறு பேருந்து நிலையத்திலும் கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளன.
தூத்துக்குடி, மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் போது அங்கிருக்கும் கடைக்காரர்களுக்கு மாற்று இடங்களை ஏற்பாடு செய்ததோடு, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தஞ்சையை பொறுத்தவரை அது போன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் தஞ்சை, திருவையாறு பேருந்து நிலைய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு விட்டன.
இடைக்கால தடை
ஆகவே தஞ்சை, திருவையாறு பேருந்து நிலையங்களிலுள்ள கடைக்காரர்களுக்கு தற்காலிக மாற்று இடத்தையும், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன் கடைக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும். அதுவரை கடைகளை காலி செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், துரைசுவாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் கீழ் கட்டபட்ட கடைகளுக்கு ஏலம் விடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
கடைகள் ஏலம் விடுவது குறித்த நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது என கூறிய நீதிபதிகள், மனு குறித்து நகராட்சி துறை செயலாளர், தஞ்சை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 10 எம்எல்ஏக்கள் உள்பட 500 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு