மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஜூன் 15ஆம் தேதி ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. ஆனி ஊஞ்சல் உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருட்பாலித்தார்.

கரோனா பெருந்தொற்றை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இவ்விழாவையொட்டி மாணிக்கவாசகர் பாடிய திருவாசகப் பாடல் சுவாமிக்கு பாடி அருளப்பட்டது. பாடல் பின்வருமாறு,

'மூன்றங்கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான் தெளிந்தங்கு
ஊன் தங்கி நின்றுருக்கும் உத்தரகோச மங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ'

பொழிப்புரை:
"மயிலைப் போன்ற சாயலைப் பெற்று, அன்னத்தைப் போன்ற நடையையுடைய பெண்களே! மூன்று கண்களை உடையவனும், விண்ணுலகில் தங்கியிருக்கும் தேவர்களும் காணமுடியாத தாமரை போன்ற திருவடிகள் உடையவனும்
தேன் கலந்தது போன்று அமுதாய் ஊற்றெடுத்து உடலில் பொருந்தி உருக்குகின்ற திருவுத்தர கோச மங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன் எழுந்தருளி இருக்கும் திருவிடை மருதூரைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடு வோம்" என்பது இந்த பாடலின் பொருளாகும்.

இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்: மோடியுடனான சந்திப்பில் என்ன ஸ்பெஷல்?