மதுரை பொன்னமங்கலத்தைச் சேர்ந்த தெய்வம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”மதுரையில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எதிரே, அரசு கண்மாய் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலத்தை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதில் 15 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து தனியார் ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அமைந்துள்ள இடம் ஆக்கிரமிப்பு இடம் என உறுதியான நிலையிலும், ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாயை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து பொது இடத்தை ஆக்கிரமித்துள்ள ஹோட்டலை அகற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, பொதுப்பணித் துறை முதன்மை செயலர் மணிவாசகம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் ஆறு பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.