தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கீழ வடகரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன். இயற்கை மீது கொண்ட அன்பாலும், உடல் மீதுள்ள அக்கறையாலும் உணவுப்பொருள்களை ரசாயன கலப்பில்லாமல் எடுத்துக் கொள்ள எண்ணிய அவர், தென்னை, கொய்யா, வாழை உள்ளிட்ட அனைத்துவித பயிர்களையும் இயற்கை முறையில் சாகுபடி செய்துவருகிறார். அதோடு மாப்பிள்ளை சம்பா என்னும் பாரம்பரிய நெல் சாகுபடியிலும் இயற்கை முறையைப் பயன்படுத்தி தற்போது அறுவடைக்கு தயார் செய்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை முறையிலேயே விவசாயம் செய்துவருவதாகக் கூறும் பாலசுப்பிரமணியன், இரண்டு ஏக்கர் நிலத்தில் மாப்பிள்ளை சம்பா நெல்லை சாகுபடி செய்துள்ளார். ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ பயன்படுத்தாமல், பஞ்ச கவ்யம், ஜீவாமிர்தம், மீன் அமிலம் என இயற்கைப் பொருள்களையே பயன்படுத்தும் இவரிடம், நாட்டு மாடுகள், நாட்டுக்கோழி போன்றவையும் இருப்பதால் சாணம், கோமியம் உள்ளிட்டவை எளிதில் கிடைக்கிறது.
தற்போது 148 நாள்கள் முடிவடைந்த நிலையில், அறுவடைக்குத் தயாராகியிருக்கும் மாப்பிள்ளை சம்பாவில், மகசூலும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கிடைப்பதாகக் கூறுகிறார் பாலசுப்ரமணியம். அறுவடைக்கு இன்னும் சில நாள்கள் உள்ள நிலையில் தற்போதே இந்த நெல்லை விலை கேட்டு பலரும் தொடர்புகொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ரசாயன பொருள்கள் பயன்படுத்தாவிட்டால் விளைச்சல் எடுக்க முடியாது என்று பெரு நிறுவனங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், மீன், முட்டை, கோழிக் கழிவுகள், வேப்பங்கொட்டை, வெல்லம், கரும்பு உள்ளிட்ட இயற்கையான பொருள்களை வைத்து ரசாயனத்திற்கு மாற்றாக விவசாயிகளாலும் செயல்பட முடியும் என்கிறார் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பணியாற்றும் இயற்கை வேளாண் பொருள் உற்பத்தியாளர் முருகன்.
அறுவடை செய்து பொருள்களை விற்க முடியாமல் பரிதவிக்கும் விவசாயிகளுக்கு மத்தியில், மகசூலுக்கு முன்பே விலை கிடைக்கும் இந்த நிலை, தற்சார்பு இயற்கை வேளாண்மையில் மட்டுமே கிடக்கும் என்பதை நிரூபித்திருக்கிறார் இந்த இயற்கை விவசாயி.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கு மிஸ்ஸாகும் ஃபுட்!