மதுரை மாவட்டம் மேலூர் கணேஷ் திரையரங்கில் கென்னடி கிளப் என்ற திரைப்படத்தின் மதிய காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கீழ் தளத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதனால் திரையரங்கில் கரும் புகை மண்டலம் உருவானது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ரசிகர்களை வெளியேற்றி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து மேலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.