மதுரை: கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு புதன்கிழமையன்று (அக்டோபர் 6) இணையதள இணைப்பு வாயிலாகச் செய்தியாளரைச் சந்தித்தார்.
அவர் பேசும்போது, "கரோனா தொற்று காரணமாக பயணிகள் ரயில்கள் இயக்கம் குறைந்த போதும் ஊழியர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஒன்றிய அரசு 78 நாள்கள் சம்பளத்தை ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது.
மதுரை கோட்டத்தில் அரசிதழில் இடம்பெற்ற (Gazetted) அலுவலர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் தவிர ஏழாயிரத்து 855 ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது. ஊழியர்களுக்கு உச்சபட்சமாக 17 ஆயிரத்து 951 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது.
இந்த ஊக்கத்தொகை இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடும். மதுரை கோட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க மொத்தமாக 13 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது.
கரோனா தொற்று காரணமாக மாநில அரசின் வழிகாட்டுதலின்படி பயணிகள் ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது.
இந்த தாம்பரம் நாகர்கோவில் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06003) தாம்பரத்திலிருந்து அக்டோபர் 13, நவம்பர் 3 ஆகிய நாள்களில் இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06004) நாகர்கோவிலிலிருந்து அக்டோபர் 17, நவம்பர் 7 ஆகிய நாள்களில் மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (அக்டோபர் 7) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை: கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல், பிரியங்கா