மதுரை: இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, மதுரை - ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் இடையே முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ஏற்கெனவே இந்தப் பிரிவுகளில் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக, தற்போது மேலும் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயிலை இயக்க முடிவு செய்தது.
மதுரை - ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் மே 30ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவித்திருந்த நிலையில், மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06651) மதுரையில் இருந்து இன்று காலை 06.35 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில் காலை 10.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றது. அதேபோல் மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06656) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு புறப்பட்டு இரவு 09.55 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது.
இந்த ரயில்கள் மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜ கம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, உச்சிப்புளி, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயும் படிங்க: மதுரை- தேனி முதல் ரயிலில் 574 பயணிகள் ரூ.21, 750 வருமானம் - மதுரை ரயில்வே கோட்டம்