மதுரை: கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுத் திகழ்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, "அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை மருத்துவக்கல்லூரி கரோனா தடுப்பூசி மையம் கடந்த ஜனவரி 16 முதல் செயல்பட்டுவருகிறது.
மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கடந்த ஏப்ரல் மாதம்வரை குறைவான அளவு தடுப்பூசியே செலுத்தப்பட்டது.
மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், செவிலியர், சமூகம் மற்றும் நோய்த்தடுப்பு உயர்நிலைத் துறையினர் அனைவரும் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதாலும், இணையதளம் மூலமாகத் தடுப்பூசிக்கான நாள், நேரத்தை முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, தகுந்த இடைவெளியுடன் கால தாமதம் இல்லாமல் தடுப்பூசி செலுத்தியதாலும், மக்கள் அதிகமான அளவில் தடுப்பூசி போட முன்வந்தனர்.
இதன் விளைவாக, புதன்கிழமை (ஆக. 4) நிலவரப்படி ஒரு லட்சம் தடுப்பூசிகள் (கோவாக்சின் - 31,096, கோவிஷீல்டு - 69,421) செலுத்தப்பட்டு, மாநிலத்தின் மருத்துவமனைகளுக்கு இடையே அதிகப்படியான தடுப்பூசி செலுத்தப்பட்ட மையமாக அரசு இராசாசி மருத்துவமனை மையம் இருக்கிறது. இதைச் செயல்படுத்திய குழுவை, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ். அனிஷ் சேகர் நேரில் வந்து அவர்களுக்கு மரியாதை செய்தார்.
இக்குழுவின் உறுப்பினர்கள், மருத்துவர்கள் பாப்பையா, அருள்சுந்தரேஷ்குமார், பிரியா, வாசிம்ஷா, தலைமைச் செவிலி காளீஸ்வரி, செவிலியர் மகேஸ்வரி, பிரியா, சுகுமாரி, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் லாவண்யா, கிளாரா ஆகியோர் ஆவர்.
மேலும் இந்த இணையதள சேவையை (www.maduraicorporation.co.in) இலவசமாகச் செய்துதரும் Covid Free Madurai (CFM) அமைப்பிற்கும், ZOHO அமைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முன்களப் பணியாளர்கள் முன்வந்து தடுப்பூசி போட வேண்டுகோள்!