மதுரையைச் சேர்ந்த ஜெயா என்பவரது மகன் முத்து கார்த்திக் (17). திருட்டு வழக்கிற்காக கடந்த ஜனவரி 7ஆம் தேதி அவரை எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்தனர். ஆனால் அதன் பிறகு அச்சிறுவனுக்கு உடல்நிலை மோசமானது. ஒருவாரம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முத்து கார்த்திக் உயிரிழந்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் தாக்கியதால்தான் தன்னுடைய மகன் உயிரிழந்தார். மகனின் உடலைத் தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என ஜெயா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனின் உடலைத் தோண்டி மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும், அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
அதன்படி, மதுரை புளியங்குளம் பகுதியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்ட கார்த்திக்கின் உடலைத் தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதன் அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.