மதுரை: மதுரை எம்பி சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோவிட் காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்ட ரயில்களை சாதாரண ரயில்களாக மாற்ற வேண்டும் என்றும், முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டோம்.
அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நாளுக்கு நாள் கிடைத்துவருகிறது. பொதுப்பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட நான் எழுப்பிய பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மிக முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளோம்.
கோவிட் காலத்தில் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்ட ரயில்கள்
கோவிட் காலத்தில் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு அவற்றின் கட்டணமும் உயர்த்தப்பட்டிருந்தது. எனவே அவற்றை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றி, கட்டணத்தினைக் குறைக்க வேண்டுமென ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தேன். அதில் மிக முக்கியமான வெற்றி கிடைத்துள்ளது.
சிறப்பு ரயில் வண்டிகளை வழக்கமான வண்டிகளாக மாற்றுவதற்கு அவற்றின் எண்களை இணையத்தில் பதிவேற்றும் செய்யும் பணி நேற்று (நவம்பர் 14) இரவு தொடங்கியது.
வழக்கமான ரயிலாக மாற்றும் பணி தொடக்கம்
இரவு பதினொன்றரை மணி முதல் காலை ஐந்தரை மணி வரை ஆறு மணி நேரம் இந்தப் பணி நடைபெறும். நவம்பர் 14 & 15 தேதிகளில் தொடங்கிய இந்தப் பணி ஏழு நாள்கள் படிப்படியாக நடைபெறும்.
நேற்று இரவு முதல்கட்டமாக 28 வண்டிகளின் எண்கள் மாற்றத் திட்டமிடப்பட்டது. இந்த ஏழு நாள்களில் ஆறு மணி நேர காலத்தில் பயணிகள் பயணச்சீட்டுகளைப் பதிவுசெய்ய இயலாது. எண்கள் மாற்றப்பட்டு வழக்கமான வண்டிகளாக்கப்பட்ட பின் வழக்கமான கட்டணமும், முதியோர் சலுகை உள்பட மற்ற சலுகைகளும் நடைமுறைக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவர் மீது பாய்ந்த போக்சோ