மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைதந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். கீழடி அகழாய்வு இந்திய வரலாற்றுக்கு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடி வரலாறு ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என அதிகாரப்பூர்வமாக நேற்றைய தமிழ்நாடு அரசின் ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இந்த ஆய்வறிக்கை புதிய மைல்கல் போன்றது.
கீழடியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிலேயே தந்தத்தாலான 19 தாயக்கட்டை கிடைத்துள்ளது மிகவும் அரிதானது. இன்று இந்தியாவில் இருக்கும் மொழிகளிலே தமிழ் மொழிதான் முதல் மொழி என அறிவியல் பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்தான் முதலில் எழுதப்பட்ட எழுத்து வடிவிலான மிகப் பழமையான மொழி என ஆய்வறிக்கை கூறுகிறது.
சிந்து சமவெளியில் கிடைத்த எழுத்து வடிவமும் கீழடியில் உள்ள எழுத்து வடிவமும் குறியீட்டுக்கும் உள்ள ஒற்றுமை அதிகமாக உள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மத்திய அரசு 6 ஆயிரம் கோடி அளவுக்கு தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துவருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் தமிழ்நாட்டிற்கு அருங்காட்சியகம் அமைக்க எந்த ஒரு நிதியும் தற்போது ஒதுக்கீடு செய்யவில்லை. கீழடியில் சர்வதேச அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய தொல்லியல் துறையில் ஸ்ரீராம் தலைமையிலான அகழ்வாராய்ச்சிக் குழு தொல்லியல் எச்சங்கள் இல்லை என வஞ்சகத்தோடு கைவிட்டுச் சென்றதை, தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடி அகழ்வாராய்ச்சியில் அம்பலப்படுத்தியுள்ளது” எனக் கூறினார்.