உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூலம் திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும்.
ஆவணித் திருவிழாவில் தான் சுவாமி நிகழ்த்திய திருவிளையாடல் லீலைகள் நடக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா சுவாமி சந்நிதியில் உள்ள கொடிமரத்தில் இன்று(ஆக.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆக.29 முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 12 நாட்கள் 12 திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெறும்.
ஆக.29 ஆவணி மூல உற்சவத்தின் முதல் திருநாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், ஆக.30 - நாரைக்கு மோட்சம் அளித்தல், ஆக.31 - மாணிக்கம் விற்றல், செப்.1 - தருமிக்கு பொற்கிழி அருளியது, செப்.2 - உலவாக்கோட்டை அருளியது,
செப்.3 - பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், செப்.4 - வளையல் விற்றல், செப்.5 - நரியை பரியாக்கியது, செப்.6 - பிட்டுக்கு மண் சுமந்த லீலை, செப்.7 - விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சியும் நடைபெறும் வழக்கத்தின் அடிப்படையில் செப்.4ஆம் தேதியன்று இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வு நடைபெறும்.
செப்.6ஆம் தேதி நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்வை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோயிலில் இருந்து புறப்பட்டு பிட்டுத்தோப்புக்குச்சென்று உற்சவம் முடிந்து இரவு 9:30 மணிக்கு கோயிலுக்கு வந்தடைவர்.
அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் வடக்கு கோபுர வாசல் வழியாகச்சென்று ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 - 12 மணி வரையும், மதியம் 3 முதல் 8 மணி வரையும் கண்டுகளிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் களைகட்டிய ஆவணித்திருவிழாவின் ஏழாம் நாள் உற்சவம்