மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இளஞ்செழியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், “ இந்தியாவில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், பழமையான கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துக்கள் அனைத்தும் மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் அராபிக் மற்றும் பெர்சியன் பண்பாட்டுச் சின்னங்கள் நாக்பூரில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, சமஸ்கிருதம் மற்றும் திராவிட பாரம்பரிய சின்னங்கள் மைசூர் மையத்திலும் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 ஆம் நூற்றாண்டிலிருந்து கண்டறியப்பட்ட தொன்மையான சின்னங்கள் கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள் போன்றவை தற்போது மைசூரில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பகுதியில் இருந்து திராவிட நாகரிகத்தை வெளிப்படுத்தும், இந்த அரிய வகை பொருள்கள் முன்னதாக ஊட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு மாற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.
நமது பழங்கால தொன்மையான நாகரிகத்தை அறிந்து கொள்ள உதவும், இந்த அரிய வகைப் பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் வைக்கப்படும்போது முறையாக பராமரிக்கப்படாமல் போனால் அவை சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, இவற்றை தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்திற்கு மாற்றி, பராமரிக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவானது, மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (டிச.21) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “முனைவர்கள் ராஜவேலு, சாந்தலிங்கம், மார்க்சிய காந்தி, பத்மாவதி மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறையில் பணியில் இருக்கும் கல்வெட்டியல் அலுவலர் ஆகியோர் மைசூரில் உள்ள கல்வெட்டியல் மையத்திற்கு சென்று அங்கு தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தும் முறையாக படிமம் எடுக்கப்பட்டுள்ளதா? பாதுகாக்கப்பட்டுள்ளதா? அவற்றில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? எத்தனை கல்வெட்டுகள் உள்ளன? என்பது தொடர்பாக ஆய்வு செய்து ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : 50 விழுக்காடு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்