விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பின் செயலர் சித்ரா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கரிசல்குளம், திருவள்ளலூர், எஸ். நாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கள் கூட்டமைப்பின் சார்பில் நியாயவிலைக்கடை நடத்த 2000ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார்.
2010இல் நாங்கள் நடத்தி வந்த ரேஷன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்த வழக்கில் ரேஷன் கடைகளை நடத்த தங்களுக்கு வாய்ப்பு வழங்கி நிகழாண்டு ஜூன் மாதத்தில் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி விருதுநகர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள், நாங்கள் நடத்தி வந்த நியாயவிலைக் கடையின் சாவியை வாங்கிச் சென்றுவிட்டனர்.
ஆகவே, பெண்கள் அமைப்பினர் நடத்திய நியாயவிலைக்கடையை கூட்டுறவு துறைக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என, அந்த மனுவில் சித்ரா கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயனா, ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பினர் நடத்தி வந்த நியாயவிலைக்கடையை, கூட்டுறவுத் துறைக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஆரோக்கியமான பாதையில் இந்தியாவின் ஆரோக்கியம்! ஆயுஷ்மன் பாரத் குறித்து அறிந்திடுங்கள்...