கோயம்புத்தூரைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை இயக்கத்தின் செயலாளர் தியாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்புமிக்க கோயில்களை கட்டிய ராஜராஜசோழனின் உடல் தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் கிராமத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இலங்கை உள்ளிட்ட நாடுகள் வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்ற ராஜராஜசோழன் புதைக்கப்பட்ட இடமோ எந்தவித பராமரிப்புமின்றி வெட்டவெளியாக ஓலைக்குடிசைக்கு அடியில் சிவலிங்கத்தோடு உள்ளது. அந்த இடத்தில் அவருக்கு சிலை மற்றும் கோயில் அமைக்கவும் அங்குள்ள சிவலிங்கத்திற்கு கோயில் எழுப்பவும் அனுமதி அளிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கோயில் வேலைகளை முடித்து தருவோம். வேலை முடிந்த பின்பு எவ்வித உரிமையும் கோர மாட்டோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மன்னர் சிவாஜியை மும்பையில் கொண்டாடுவதுபோல், தமிழ்நாட்டில் நாம் மன்னர்களை கொண்டாடுவதில்லை. 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய ராஜராஜசோழன் உள்ளிட்ட மன்னர்கள் கடல் கடந்து நாடுகளை வெற்றிக்கொண்டு பல சாதனைகளை புரிந்துள்ளனர். இதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து மனுதாரர் கோரிக்கை குறித்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரதுறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.