மதுரையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டின் பேரூராட்சிகளில் தெருவிளக்குகள், குப்பைத் தொட்டிகள் அமைத்தல், தண்ணீர் விநியோகம் செய்தல் உள்ளிட்ட திட்டங்களுக்களுக்காக ஒப்பந்தங்கள் கோரப்படுவது வழக்கம். தமிழ்நாடு ஒப்பந்த சட்ட விதிமுறைகளின்படி, மேற்கூறிய ஒப்பந்தங்களைவிடும்போது ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஆனால், இந்த சட்ட விதிமுறைகள் கடந்த சில ஆண்டுகளாகவே பின்பற்றப்படவில்லை. எனவே சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளின் ஒப்பந்தங்கள் வெளியிடும் பொழுது முந்தைய ஒப்பந்ததாரர்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். அத்துடன் இ-டெண்டர் முறையில் ஒப்பந்தத்தை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு ஒப்பந்த சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் பேரூராட்சிகளின் ஒப்பந்தங்கள நடத்தப்பட வேண்டும். இதனை தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குநர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: பள்ளிவாசல் மயான வேலைகளை செய்ய எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு