தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், " 2019 நவம்பரில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி அங்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சில மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டும் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 30 ஏக்கரிலான தென்காசியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலேயே புதிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான போதுமான இடம் இருந்தும், அங்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை 11 ஏக்கரில் கட்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், மருத்துவமனை அருகே ஆட்சியர் அலுவலகம் அமைந்தால் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படவும், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்து, அங்கு புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட உத்தரவிட வேண்டும் ” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ” மாவட்டங்களை புதிதாக பிரிக்கும் போது உள்கட்டமைப்பு வசதிகளை ஏன் பார்ப்பதில்லை? 2 அல்லது 3 தாலுகாக்கள் இருக்கக்கூடிய அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், திருவண்ணாமலையில் 11 தாலுகாக்கள் உள்ளன.
குறைந்தது 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 1 நாடாளுமன்ற உறுப்பினர், 1 மாவட்ட ஆட்சியர், 1 மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 1 மாவட்ட நீதிபதி இருப்பது போல் மாவட்டங்களை பிரிக்க வேண்டும். மக்களின் தேவைக்கு ஏற்ப அல்லாமல், அரசியல் கட்சிகள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல ” எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், உத்தரவிற்காக வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'தமிழகத்தில் கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு 60 சதவீதம் நிதியை வழங்க வேண்டும்' பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்