மதுரை: சிட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் காயாம்பட்டி. இது ஒத்தக்கடை வேளாண் அறிவியல் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள சிறிய கிராமமாகும். இங்கு 200 குடும்பங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றன. இங்குள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சற்றேறக்குறைய 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர்.
கடந்த 1964ஆம் ஆண்டு அப்போது காவல் துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களால், இப்பள்ளிக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. தற்போது 57 ஆண்டுகள் கடந்த நிலையில் குறிப்பிட்ட இப்பள்ளி கட்டடம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

முதலமைச்சர்தான் பொறுப்பு
இதுகுறித்து, காயாம்பட்டியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் காளிதாசன் கூறுகையில், "எங்கள் ஊர் குழந்தைகளுக்கு கல்வி ஆதாரமாக உள்ள இந்து தொடக்கப் பள்ளி கட்டடம், கட்டப்பட்டு 57 ஆண்டுகள் ஆகின்றன. இதிலுள்ள, மரச் சட்டகங்கள் எல்லாம் கரையானால் அழிக்கப்பட்டு உடைந்துவிடும் நிலையில் உள்ளன.

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த கட்டடத்தில்தான் அமர்ந்து படித்து வருகின்றனர். ஆகையால் இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமானால் அதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், மதுரை மாவட்ட ஆட்சியரும்தான் பொறுப்பு" என்றார்.
இதையும் படிங்க: 17ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி