மதுரை: தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியைத் தாண்டி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
இந்நிலையில் வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரும், வைகை அணையை ஒட்டியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றில் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும் - கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிடவோ, நீர்நிலைகளின் அருகிலோ கட்டிவைக்கவோ வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
வெள்ள இடர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனாலும் மாணவர்கள், இளைஞர்கள் இடரை உணராமல் ஆற்று வெள்ளத்தின் அருகில் சென்று செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை