மதுரை: உ. வாசுகி உள்ளிட்ட 26 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தனர். அதில், "2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் செல்லூர் கே. ராஜு போட்டியிட்டார்.
அதிமுக சார்பில் மக்களுக்கு வாக்குக்குப் பணம் வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதோடு காவல் துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
இந்த வழக்கு விசாரணை தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதனைக் காரணம் காட்டி காவல் துறையினர் தொடர்ச்சியாகத் துன்புறுத்துகின்றனர். ஆகவே தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்தே மனுதாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதுவரை வாக்குக்குப் பணம் கொடுத்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்குக்குப் பணம் கொடுப்பது தவறானது என்பதன் காரணமாகவே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே அவர்கள் மீதான வழக்கு ரத்துசெய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் கேரி வன்முறை; ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்ப்பு!