மதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான கட்டுமானப் பணிகளுக்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜைகா நிறுவனத்தின் ஒப்புதலை எய்ம்ஸ் நிர்வாகம் எதிர்நோக்கியுள்ளது. இதற்கான பணிகள் வரும் 2023ஆம் ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்காலிக மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. சிவகங்கை, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 சீட்டுகள் என 100 எம்பிபிஎஸ் சீட்டுகள் ஒதுக்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு என தொகுப்பு அறிக்கை ஒன்றை அதன் நோடல் அலுவலர் பேராசிரியர் குச குமார் ஷகா பெயரில், புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி 50 சீட்டுகளுக்கான முழு ஒதுக்கீடும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவில் 18 சீட்டுகள் (35.5%), பட்டியலினத்தவருக்கு 7 (15%), பழங்குடியினருக்கு 4 (7.5%), பிற்படுத்தப்பட்டோருக்கு 13 (27%), பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 5 (10%), மாற்றுத்திறனாளிகளுக்கு 3 (5%) என மொத்தம் 50 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு (Creamy Layer) அனுமதியில்லை. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மாணவர்கள் ஐந்து ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருந்திருந்தாலோ, ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு இருந்தாலோ அவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் எய்ம்ஸ் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்காலிக எம்பிபிஎஸ் படிப்புக்கு 100 சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, இப்படியொரு அறிவிப்பு தமிழ்நாட்டு மாணவர்களின் கவனத்திற்கே கொண்டு வரப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: முதுகலைப் பொறியியல் படிப்பில் தொடர்ந்து குறையும் மாணவர் சேர்க்கை - காரணம் என்ன?