மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், "மதுரை ஆவின் நிறுவனத்தில் 62 பணியிடங்களை நிரப்ப 2019ஆம் ஆண்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து, நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன.
முறைகேட்டில் ராஜேந்திர பாலாஜி?
இதுவரை, 62 காலிப் பணியிடங்களில் 48 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால், இந்த நியமனத்தில் முறையாகத் தேர்வு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
இந்த முறைகேட்டில் பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, துறை அலுவலர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு அறிவிப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 48 நபர்களையும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம் ஏற்பு
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு இன்று (ஜூலை 1) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், இது குறித்து தமிழ்நாடு அரசு விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: "ஒன்றிய அரசு" என கூறுவதற்கு தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம் அதிரடி