மதுரை: சுவாசக்கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (ஆக.13) காலமானார். அவருக்கு வயது 77.
தமிழ்நாட்டின் மிகப் பழமை வாய்ந்த சைவ சமய மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இந்த மடம் சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால், 1500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இம்மடத்தின் 292ஆவது ஆதீன கர்த்தராக இருந்தவர் அருணகிரிநாதர். கடந்த 1980ஆம் மதுரை ஆதீனகர்த்தராக பொறுப்பேற்றுக் கொண்ட அருணகிரிநாதர், 41 ஆண்டுகள் ஆதினகர்த்தராக இருந்துள்ளார்.
தஞ்சையில் உள்ள கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில், திருவாரூரில் உள்ள கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் ஆகியவை மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமானவைகளாகும். மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக பல்வேறு நிலங்கள் தமிழ்நாடு, இலங்கையிலும் தற்போதும் உள்ளன.
ஆரம்பத்திலிருந்தே பல நல்ல விசயங்களை செய்து வந்த மதுரை ஆதீனம், பல்வேறு கோயில்களில் இவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பல பள்ளி,கல்லூரி, கோயில்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றியுள்ளார் அருணகிரிநாதர். சைவத்தையும் தமிழையும் தன் கண்ணெக் கொண்டு போற்றி வந்த ஆதீனம் ஒரு பத்திரிக்கையாளரும் கூட.
மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், சமூகம், அரசியல் சார்ந்த பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவராவார். ஈழத்தமிழருக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று அவர்களுக்காக குரல் கொடுத்தவர். முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டிற்கான உரிமை கோரி நடைபெற்ற போராட்டங்களிலும் பங்கேற்றவர். அனைத்து அரசியல் தலைவர்களிடமும் நட்புரிமையுடன் பழகக்கூடியவர். அருணகிரிநாதர் மீது அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தபோதும் கூட மக்கள் மத்தியில் இவருக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு குறையவே இல்லை.
நிதியானந்தா நியமன சர்ச்சை
கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை ஆதின மடத்தின் 293ஆவது ஆதீன கர்த்தராக, நித்யானந்தாவை நியமித்து அறிவித்தார். அருணகிரிநாதர். இந்த அறிவிப்பு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆதினகர்த்தராக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து அந்த நியமனத்தை ஆதீனகர்த்தர் அருணகிரி வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இந்தநிலையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுரை கே.கே. நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஆக.13) இரவு மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று (ஆக.12) மதுரை ஆதீனத்தை பார்ப்பதற்காக, தருமை ஆதீனம் மருத்துவமனைக்கு வந்திருந்தார். இந்த நிலையில் இன்று(ஆக.13) காலை மதுரை ஆதீனத்திலுள்ள, ஆதீனத்தின் அறையை நேரடியாக தருமை ஆதீனம் பூட்டி சீல் வைத்தார்.
293ஆவது ஆதீனம்
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் நாள், புதிய இளைய ஆதீனமாக திருவாவடுதுறை மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரானை 293ஆவது ஆதீன கர்த்தர் அருணகிரிநாதர் நியமனம் செய்திருந்தார். சுந்தரமூர்த்தி தம்பிரான் திருவாவடுதுறை ஆதீனத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிவ தொண்டாற்றியுள்ளார். அவருக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதுரை ஆதீனம் அறைக்குச் சீல் - நடந்தது என்ன தெரியுமா?