மதுரை: காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்துவரும் ராஜேஷ் (26), கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராஜேஷ் மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.
இச்சூழலில் தனது மனைவி கனிமொழி மூன்று வருடமாகியும் கர்ப்பம் தரிக்காமல் இருந்ததால், மருத்துவரிடம் பரிசோதித்துள்ளனர். அப்போது, கனிமொழிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உள்ளதாகவும், உடற்பயிற்சியின் மூலம் கர்ப்பப்பையில் உள்ள கட்டியை கரைக்கலாம் எனவும் மருத்துவர் அறிவுறுத்திய தன் பேரில், கட்டியை குறைப்பதற்கு உடற்பயிற்சி கூடத்தை நாடியுள்ளனர்.
இதனையடுத்து தம்பதியர் மதுரை வில்லாபுரத்திலுள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் கனிமொழியைச் சேர்த்த பின்னர், கனிமொழி தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தார். இத்தருணத்தில் சோகமாக காணப்பட்ட கனிமொழியிடம், உடற்பயிற்சி கூட யோகேஷ் பிரச்னை குறித்துக் கோட்டுள்ளார். தனது கணவன் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை துன்புறுத்தி வருவதாகவும், தனக்கு ராஜேஷ்யிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட யோகேஷ் கனிமொழியை, மதுரை நரிமேடு பகுதியிலுள்ள பெண்கள் விடுதியில் தங்கவைக்க ஏற்பாடு செய்து, அங்கு வருமாறு அழைத்துள்ளார். உடனே கனிமொழியும் கணவரை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்து, வீட்டிலிருந்து புறப்பட்டு செல்லும் வேளையில், கணவர் தடுத்துள்ளார். உடனடியாக இதுகுறித்து உடற்பயிற்சி கூடம் நண்பரிடம் தெரிவித்த கனிமொழி, தன்னை அழைத்துச் செல்லுமறு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து யோகேஷ் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு கனிமொழியை அழைத்து பெண்கள் விடுதியில் கொண்டு தங்கவைத்துள்ளார். மனைவி வீட்டை விட்டுச் சென்று மூன்று நாள்களுக்குப் பிறகு யோகேஷ் கண்ணா, கணவர் ராஜேஷிடம் தொடர்புகொண்டு கனிமொழியின் கல்வி சான்றிதழ்கள், ஜாதகம் உள்ளிட்டவைகளை தரும்படி கேட்டுள்ளார்.
இதனையடுத்து ராஜேஷ் பெருங்குடி காவல் நிலையத்தில் தனது மனைவி, உடற்பயிற்சிக் கூடம் ஆசிரியருடன் நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாக புகார் ஒன்றை அளித்தார். பெருங்குடி காவல் நிலையம் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையம் என்பதால் புகாரின்பேரில் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி ராஜேஷ், கனிமொழி, யோகேஷ் கண்ணன் ஆகியோரை திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ராஜேஷ் உடன் வாழ பிடிக்கவில்லை என்பதாகவும், தொடர்ந்து தனக்கு விவாகரத்து பெற்று தரவேண்டும் என்று கனிமொழி கூறியதை தொடர்ந்து காவல்துறையினர் கனிமொழியை விடுதிக்கு அனுப்பிவைத்தனர்.
இவ்வேளையில், தற்போது தன்மீது அவதூறாக புகார் தெரிவித்ததால் மிகுந்த, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், தனது சான்றிதழ்களை தர மறுப்பதால் எந்த வித அரசு வேலை உள்ளிட்ட பணிகளுக்கும் விண்ணப்பிக்க இயலவில்லை என்றும், ஊடகங்களில் செய்தி வெளியானதால் பெற்றோரும் ஆதரவின்றி தற்போது தனித்து விடப்பட்ட நிலையில் இருப்பதாக காணொலி பதிவு ஒன்றை கனிமொழி வெளியிட்டுள்ளார்.
பெண்கள் காதல் என்ற பெயரில் ஆர்வக்கோளாராக எடுக்கும் சில முடிவுகளால், குடும்பங்களை இழந்து ஆதரவற்ற நிலையில் தனித்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது இச்சம்பவம் எடுத்துரைக்கிறது. தற்போது, கனிமொழியின் பெற்றோர் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கனிமொழியின் எதிர்பார்ப்பாக உள்ளது.