மதுரை வட பழஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை கரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 'மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பு விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இவைகளெல்லாம் தீவிரப்படுத்தப்பட்டு ஜூலை நான்காம் தேதியில் இருந்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டு ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு வருகிறது.
ஆயிரத்து 400 படுக்கைகள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மூச்சுத்திணறல் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியோடு அனைத்து வசதிகளும் தயார் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆக்சிஜன் வசதியுடன் அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கைகள் தயாராக உள்ளன. தனியார் மருத்துவ மனையில் 800 முதல் 900 வரை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கோவிட் நல மையம் மட்டும், மதுரையில் 21 சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வடபழஞ்சி உள்ள தகவல் தொழில் நுட்பத்தின் சிறப்பு மண்டலத்தில் பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தில் தற்போது 1,000 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு கரோனா சிகிச்சை மையமாக செயல்படுத்தப்பட உள்ளது. மூன்று தலங்களிலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் தயாராகி வருகின்றன.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கிராமப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில், மாநகராட்சியில் காய்ச்சல் முகாம் ஏற்படுத்தியதுபோல் கிராமப்புறங்களிலும் காய்ச்சல் முகாமும் நடத்தப்பட்டது. இந்த முகாம் நடத்தப்பட்டதால் நல்ல பலனைக் கொடுத்துள்ளது. மக்கள் அளித்த ஒத்துழைப்பும் மிக நல்ல பலனை கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.