மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்சவம் வருகிற நவ.,14ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பல்வேறு ஆன்மிகத் திருவிழாக்களுக்கு சிறப்புப் பெற்றதாகும். இந்நிலையில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திருக்கார்த்திகை உற்சவம் வருகிற நவ.,14 ஆம் தேதி தொடங்கி நவ.,23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருக்கார்த்திகையன்று லட்ச தீபம்
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் ஆடி வீதி வழியாக புறப்பாடாகி அருட்காட்சி தருகிறார். நவ., 19ஆம் தேதி திருக்கார்த்திகை அன்று மாலை திருக்கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் மாலை 7.00 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, அம்மன் சந்நிதி, திருவாட்சி மண்டபம் சென்று சுவாமி சந்நிதி, அம்மன் சந்நிதி முன்பு நடைபெறும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிகளில் எழுந்தருள்கிறார்.
மேற்படி இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் சூரசம்ஹார விழா நேரலை