மதுரை மாநகரின் மற்றொரு அடையாளமாக கருதப்படும் மதுரை மல்லிகை மத்திய அரசின் புவிசார் குறியீட்டு அந்தஸ்தை பெற்றதாகும். இதன் மணம், தரம் காரணமாக உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. இதனால் மதுரை மல்லிகை பிற மாவட்டங்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மதுரை மலர் சந்தைக்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மதுரை மல்லிகை கடுமையான விலை ஏற்றம் கண்டிருந்த நிலையில் தற்போது விலை சரியத் தொடங்கியுள்ளது.
இன்றைய நிலவரப்படி மதுரை மல்லிகை ரூ.300, பிச்சி மற்றும் முல்லை பூக்கள் தலா ரூ.200, சம்பங்கி ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.50, அரளி ரூ.200 எனது விற்பனை செய்யப்படுகிறது பிற பூக்களின் விலையும் குறைந்து காணப்படுகிறது.
இது குறித்து மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ”புரட்டாசி மாதத்தில் வேறு விசேஷ நாட்கள் எதுவும் இல்லை என்பதாலும் மல்லிகை வரத்து தற்போது மிகவும் அதிகரித்து காணப்படுவதாலும் விலை குறைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நாளொன்றுக்கு ஒரு டன் மல்லிகை பூ மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில் இன்று நாள் தோறும் பத்து டன்னுக்கு மேல் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. தற்போது மல்லிகை பூக்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றார்.
இதையும் படிங்க: குறுகிய கால அல்லது நீண்ட கால நிலையான வைப்பு(FD): உங்களுக்கு எது சிறந்தது?