இரு கண்களின் கருவிழியில் முழு வெண்படல பாதிப்பினால் தனது பார்வைத்திறனை முற்றிலும் இழந்திருந்த 22 வயது இளைஞர் ஒருவருக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவர்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை முதல்வர் சங்குமணி கூறுகையில், "தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டும் பார்வைத் திறனை மீட்க முடியாத நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அந்த இளைஞர் அழைத்துவரப்பட்டார்.
வெறுமனே ஒளி உணர்திறன் மட்டுமே அவருக்கு இருந்த நிலையில், சாலை விபத்தில் மரணமடைந்த ஒரு இளம் நபரின் கருவிழி தானமாகப் பெறப்பட்டு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்தில் எவ்விதச் சிக்கலும் இல்லாமல் அந்த இளைஞருக்கு கவனமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கருவிழி மீட்டெடுப்பு திட்டத்தின் உதவியால் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை அரசு இராசாசி மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவு தலைமை மருத்துவர் விஜய சண்முகம், மருத்துவர்கள் கலைச்செல்வி, பர்வத சுந்தரி உள்ளிட்டோர் இச்சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
தற்போது பிறர் துணையின்றி தனது வேலைகளைத் தானே செய்யும் அளவுக்கு அந்த இளைஞர் பார்வைத்திறன் பெற்றுள்ளார். மேற்கண்ட அறுவை சிகிச்சை தமிழ்நாடு அரசு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டிற்கு எச்.சி.ஆர்.பி. (HCRP) திட்டத்தின்கீழ் 350 முதல் 400 கருவிழிகள் சேகரிக்கப்பட்டு தேவையான நோயாளிகளின் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் மற்ற மருத்துவமனைகளுக்குத் தேவையின் பெயரிலும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இங்கு 30 முதல் 40 கருவிழி மாற்று அறுவை சிகிச்சை ஆண்டொன்றுக்கு செய்யப்பட்டுவருகிறது. மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கருவிழி தானம் செய்ய விருப்பப்படுவோர் 0452 2532535 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவுசெய்யலாம்" என்றார்.