ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ராதானூரைச் சேந்தவர் வாசு. இதே ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடைக்கல் கிராம உதவியாளராக இடமாறுதல் செய்யப்பட்டார்.
இதை ரத்து செய்து தன்னை மீண்டும் ராதானூர் கிராம உதவியாளராக நியமிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வாசு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:
"மனுதாரர் தன்னை பெரும்பான்மையாக வசிக்கும் சமூகத்தினர் தன்னை மிரட்டுவதாக மட்டும் தெரிவித்துள்ளார். இந்தக் காரணத்தை ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டில் எந்த கிராமத்திலும் மாற்று சமூகத்தினர் பணிபுரிய முடியாது.
அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் நான் உள்பட அனைத்து ஊழியர்கள், அலுவலர்களின் சம்பளம், சலுகையில் கரோனா காலத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை.
ஆனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்து வாழ்க்கை நடத்த போராடி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் அரசு ஊழியர்கள் அனைத்திலும் முன்களப்பணியாளராக இருந்து உழைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் தான், தன் குடும்பம், உறவினர்களின் நலனை குறித்து மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஆகவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவு பிறப்பித்தார்.