இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகே உள்ள பேச்சியம்மன் படித்துறை பேச்சியம்மன் கோயிலிலிருந்த விநாயகர், பொன்னர் சங்கர், சங்கு யானை உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு திருடப்பட்டன.
அதுதொடர்பாக திலகர் திடல் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே கோயில் சிலைகள் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் பட்டியலிலிருந்த செல்லூர் ஜெயராமன் என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவருக்கும் பேச்சி அம்மன் கோயில் சிலை திருட்டுக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், "கோயில் சிலைகளைத் தான் திருடி, அவற்றை அனுப்பானடியில் உள்ள முகமது முஸ்தபா, செபாஸ்டின் ஆகியோரிடம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவர்களும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த சிலைகளும் மீட்கப்பட்டன.
இந்தத் திருட்டு சம்பவத்தில் காவல் துறையின் துரிதமான நடவடிக்கையை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிப்பது அவசியம். காவல் துறைக்குப் பொதுமக்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் சிலை திருட்டு - மூன்று பேர் கைது!