மதுரை வைகை கரை அருகில், வைகை பெருவிழா 2019 என்ற தலைப்பில் ஏழாவது நாளாக மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக-வின் தேசிய செயலாளர் எச். ராஜா கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பசு சாணத்தில் தயாரிக்கும் திருநீரையே கோவில்களில் பயன்படுத்த வேண்டும். தற்போது கோவில்களில் எரிக்கப்பட்ட காகிதம் போன்றவற்றையே திருநீராகக் கொடுக்கிறார்கள்.
முத்தலாக் சொல்லி இஸ்லாமியப் பெண்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதை, மோடி அரசு தடுத்திருக்கிறது. இதுபோன்ற நல்ல செய்திகளை ஊடகங்கள் பரப்ப வேண்டும். தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம். இதை ஆதரித்த கட்சிகள் எல்லாம் பெண் உரிமை பேணுகிற கட்சிகள். எதிர்த்த கட்சிகள் பெண் அடிமைத்தனத்தைப் போற்றுகின்ற கட்சிகள்.
என்ஐஏ குறித்த குற்றச்சாட்டு சொல்வோர் பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள். என்ஐஏவை பலப்படுத்துவதை அவர்கள் எதிர்க்கின்றனர். இலங்கையில் குண்டு வைத்து 360 பேரைக் கொன்றவர்கள் மிருகம் இல்லையா? இதுபோன்ற மிருகங்களைப் பயங்கரவாதிகளைச் சிறையில் அடைக்கவே இந்தச் சட்டம் பலப்படுத்தப்படுகிறது. அவர்களைத் தூக்கில் போட வேண்டும். ஆனால் இந்த நாட்டில் யாகூப் மேனனை தூக்கில் இட முடிவெடுத்தால், வெட்கமில்லாமல் எதிர்க்கிறார்கள்.
திருமாவளவனிடமும் கம்யூனிஸ்ட்களிடமும் நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா? கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள். தீவிரவாதத்தை வளர்ப்பதற்காக, தீவிரவாதிகளின் மூலமாக அமைதியைக் குலைக்கும் தீயசக்திகள்” என்று பேசியுள்ளார்.