தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் தற்போது வரை திறக்கப்படவில்லை. கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் முன்பு ஒற்றை காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கோயில்களின் முன்பு ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கிய மாநில அரசு கோயில்களையும் திறக்க வேண்டும், டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஒரு நீதி, கோயில்களுக்கு ஒரு நீதியா என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறியதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனர்.
இதேபோன்று, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் முன்பு இந்து முன்னணி அமைப்பின் சேலம் பிரதிநிதிகள் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினர். மாநில அரசு கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்படாவிட்டால் இந்து முன்னணி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தும் என்று எச்சரித்தனர்.