தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. மேலும், சாக்கடைகள் அடைபட்டு இருப்பதால் கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்வதற்குச் சிரமமாக உள்ளது.
இதனால், கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் பல தொற்று நோய்கள் ஏற்படும் நிலையுள்ளது. பல, சாலைகளில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், சாலைகள் இருட்டாக இருப்பதினால் திருட்டு, வழிப்பறி போன்றவை அப்பகுதியில் நடந்து வருகிறது. எனவே, குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள் செப்பனிடவும், கழிவுநீர் சாக்கடை அடைப்பைச் சரி செய்தும் , நகராட்சி பொதுக் கழிப்பிடத்தைச் சுத்தமான முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும்படியும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “சாலை அமைக்க வேண்டும், குடிநீர் வசதி வேண்டும் என அதிகமான மனுக்கள் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது. ஒரு பகுதிக்குச் சாலை வசதி கோரி நீதி மன்றத்தை அணுகுகின்றனர்.
மனுதாரரின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. அவை நிறைவேற்றப்படாமல், இதே உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்காகத் தாக்கல் செய்யப்படுகிறது. அரசு அலுவலர்களிடம் கேட்டால், நிதி இல்லை என்று பதில் கூறுவதாகத் தெரிகிறது.
சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதி மக்கள், அந்த தொகுதி சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களை அணுக வேண்டும். அவர்கள் இது போன்ற கோரிக்கைகளுக்கு நிறைவேற்றுவதற்கு, முன்னுரிமை வழங்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், மனுதாரரின் கோரிக்கை குறித்து , தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரங்களுக்குள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.