நாகர்கோவில் நாகராஜா கோயிலில் காவலராக பணிபுரிந்துவரும் ஹரிபத்மநாபன், புருஷோத்தமன் ஆகியோர் ஊதிய உயர்வு கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மகாதேவன், "மனுதாரர்களையும் சேர்த்து 15 பேர் காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்த ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்த போது, ஊதிய உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு மனுதாரர்களுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒரே நேரத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட காவலர்களில் சிலருக்கு மட்டும் ஊதிய உயர்வு மறுப்பது பாகுபாடு காட்டுவதாகும்.
கோயில் பாதுகாப்பு முக்கிய பணியாகும். இப்பணியை மேற்கொள்ளும் காவலர்களின் பணி முக்கியமானது. மதிப்புமிகுந்தது. எனவே காவலர்கள் ஊதிய உயர்வு வழக்கில் 2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி மனுதாரர்களுக்கு 1997ஆண்டு முதல் 5ஆவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையிலும், பின்னர் 6ஆவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையிலும் நான்கு வாரத்தில் ஊதிய நிர்ணயம் செய்து பணப்பலன்கள் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.