விருதுநகரை சேர்ந்த செந்தட்டிகாளை பாண்டியன் என்பவரின் மகன் சரவணன், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தனது தந்தையை சந்தையில் இறக்கிவிட்டு, வீடு திரும்பும்போது, அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். இந்நிலையில், தனது மகன் மரணத்திற்கு இழப்பீடு கேட்டு செந்தட்டிக்காளை பாண்டியன், உயர் நீதிமன்ற பதிவாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை ரிட் மனுவாக ஏற்றுக்கொண்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
பின்னர் நீதிபதி, " கன்று குட்டியை தேர் ஏற்றி கொன்ற தன் மகனை, அதே தேரை ஏற்றி மனுநீதி சோழன் கொன்றது வரலாறு. அதுபோலான தண்டனை வழங்க இது மன்னராட்சி காலமில்லை. அதே நேரத்தில் தவறுகளும், சோகங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கருவேல மரங்கள் மீது விழுந்து கிடந்த மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து மனுதாரர் மகன் இறந்துள்ளார். இதற்கு மின்வாரியம் பொறுப்பேற்க வேண்டும்.
ஐ.ஏ.எஸ் கனவில் இருந்த 22 வயது சரவணன் இறப்புக்கு, மின்வாரியம் 13 லட்சத்துக்கு 86 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மனுதாரரின் மற்றொரு மகன் பாரதிக்கு மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்க வேண்டும். பறவைகள், பிராணிகளால் மின் கம்பிகள் சேதமடைவதை தடுக்க அடிக்கடி தணிக்கை மேற்கொள்ள வேண்டும். கம்பங்களை சுற்றியுள்ள புதர்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண ஆலோசனை வழங்கினால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும்.
ஜப்பானில் பூமிக்கடியில் மின் கம்பிகள் செல்வதால் மின் அழுத்தம் ஏற்படுவதில்லை. இந்தியாவில் பூமிக்கு மேல் மின் கம்பிகள் செல்வதால் அழுத்தம் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. அரசியல் கட்சிகள் கொக்கி போட்டு மின்சாரத்தை திருடுவதும் இங்கு அதிகளவில் நடைபெறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து மின்வாரியத்தை உயர் பாதுகாப்புடனும், லாபத்துடனும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " என உத்தரவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மின்வாரிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!