மதுரை துவரிமான் பகுதியைச் சேர்ந்த மாணவி முத்துகவிதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த மனுவில்,
"நான் மதுரை சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இறுதியாண்டு படித்துவருகிறேன். கரோனா தொற்றால் குறிப்பிட்ட நாளில் இறுதி ஆண்டு பருவத்தேர்வு நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இறுதிப் பருவத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 24 முதல் 29ஆம் தேதிவரை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இறுதி ஆண்டு மாணவர்களின் அரியர் தேர்வு குறித்து எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.
இறுதியாண்டு மாணவர்கள், இதற்கு முன் நடந்த பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களையும் சேர்த்து தேர்வு எழுத அனுமதி வழங்கினால்தான் இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்.
இறுதி ஆண்டு மாணவர்களை அரியர் தேர்வையும் சேர்த்து எழுத வாய்ப்பு வழங்கினால்தான் தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்யவும், தகுதித் தேர்வு எழுதவும் இதே கல்வி ஆண்டில் வழக்கறிஞராக பதிவு செய்யவும் வாய்ப்பு இருக்கும்.
ஆனால் இறுதி ஆண்டு மாணவர்கள் அரியர் தேர்வையும் சேர்த்து எழுதலாம் என்பது குறித்து எந்தவித வழிமுறைகளையும் வகுக்கவில்லை. இதனால் இறுதியாண்டு மாணவர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.
எனவே நடைபெற உள்ள இறுதி ஆண்டு சட்டப்படிப்பு பருவத் தேர்வோடு சேர்த்து, எனது அரியர் பாடத்தையும் சேர்த்து தேர்வு நடத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர், பல்கலை மானியக்குழு செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 29ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.