மதுரையைச் சேர்ந்த தங்கமாயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'மதுரை தென்பழஞ்சி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலின் குதிரை எடுப்பு திருவிழா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, ஆடல் பாடல் நிகழ்வை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் மனு கொடுத்தேன். ஆனால், அனுமதி மறுத்து விட்டனர். எனவே, விதிமுறைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன் நேற்று (ஜூன்9) விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு விசாரணையின்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'கடந்த 09.04.2019 அன்று காவல்துறை இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் பரிசீலனை செய்து, காவல் ஆய்வாளர் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கலாம்' என கூறப்பட்டு உள்ளது.
எதை செய்யவேண்டும்;எதை செய்யக் கூடாது: அந்த சுற்றறிக்கையில், 'நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உரிய தேவையான தகவல்களுடன் நிகழ்வு நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு மனு அளிக்கவேண்டும். மனு அளிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு வாரத்திற்குள் அனுமதி குறித்து முடிவு தெரிவிக்கவேண்டும். ஆபாசமான அசைவுகள், வசனங்கள் இருக்க கூடாது.
காவல்துறையின் கவனத்திற்கு: சாதி, மத, இன, மொழி உள்ளிட்ட விடயங்களைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது. அவ்வாறு பேசினால், ஆடல், பாடல் நிகழ்வை நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் பரிசீலனை செய்து அனுமதி வழங்கலாம்' என கூறப்பட்டிருந்தது.
எனவே, மனுதாரர் ஆடல் பாடல் நிகழ்வு நடத்த அனுமதி கோரி, புதிய மனுவை தொடர்புடைய காவல் ஆய்வாளரிடம் வழங்க வேண்டும். சுற்றறிக்கையின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: 'திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசினாலோ, ஆடினாலோ அம்புட்டுத்தேன்' - எச்சரித்த உயர் நீதிமன்றம்!