கொடைக்கானல் நகரைச் சேர்ந்த எஸ்.மனோஜ் இமானுவேல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சமீப ஆய்வின்படி யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. சில கொடியவர்கள், தந்தம் போன்றவற்றுக்காக யானைகளை கொடூரமான முறையில் கொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.
இது போன்ற நிகழ்வுகளால், யானை இனமே அழியும் அபாயம் உள்ளது. ஆகவே யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதேபோல தமிழ்நாட்டிலுள்ள காடுகளில் விலங்குகளை கொன்று, உடலை கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க கோரி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்திய சௌமியா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு சிறப்புப் பிரிவின் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், "இது சர்வதேச அளவில் நடைபெறுகிறது. இது மிகப்பெரும் மாஃபியாவாகவே உள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், "யானை மிகவும் முக்கியமான உயிரினம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ள நிலையில், இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வெவ்வேறு மாநிலங்களிலும் உள்ளனர்.
ஆகவே தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: யானை வழித்தடத்தில் செங்கல் சூளை! - உடனே அகற்ற உத்தரவு!