மதுரை: வாடிப்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி ராஜம்மாள் தாக்கல் செய்த மனு இன்று (ஆக.10) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. முன்னதாக அந்த மனுவில், "எனது கணவர் பாரத ஸ்டேட் வங்கி, தனிச்சியம் கிளையில் ATM-ல் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் காவலாளியாக இருந்த எனது கணவனை கொலை செய்து ATM கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நான் எனது கணவனின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்தேன். எனது கணவன் இறப்பால் எனது குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, எனக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தரப்பில், இறந்த ஏ.டி.எம் காவலாளர் செல்வம் குடும்பத்திற்கு ரூ.3,75,000 காசோலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி