மதுரை: வீரமரணமடைந்த இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பயணித்த காரின் மீது செருப்புகளை வீசியவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் செருப்பு வீசிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலரைக் கைது செய்தனர். சிலர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.
இந்த வழக்கில் மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செதிருந்தனர்.
இந்த மனு இன்று (செப்.1) நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என 3 பேரும் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி இன்று பிறப்பித்த உத்தரவில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த 3 நபர்களும் சேலத்தில் தங்கி, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனை விதித்து 3 நபர்களுக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசு அல்ல.. திருப்பி அடிப்பேன்.. அண்ணாமலை