கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்னுத்துரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய 12ஆவது வார்டில் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றியும் பெற்றேன். கோவில்பட்டி ஊராட்சியின் 19 வார்டுகளில், திமுக 11 வார்டுகளிலும் அதிமுக 8 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
ஜனவரி 11இல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலும், மாலை துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய நாளில் அனைத்து கவுன்சிலர்களும் ஆஜராகியிருந்தனர். இருப்பினும் மதியம் வரை தேர்தல் நடத்தப்படவில்லை.
சுமார் ஒரு மணி அளவில் தேர்தல் அலுவலர் ஜெயசீலன் நெஞ்சுவலி காரணமாக கோவில்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே தேர்தலை ஒத்திவைத்த உத்தரவை ரத்து செய்து, தேர்தல் தனிப் பார்வையாளர் அல்லது வழக்கறிஞர் ஆணையத்தை நியமித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "திமுக பெரும்பான்மை வெற்றிபெற்ற ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இதுபோல நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்துள்ளது" என வாதிட்டார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.